கப்பல் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்த இருவர் கைது
jobrocket fraud 2 accuseds arrested
கப்பல் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வசந்தன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘CMS Center for Marine Studies என்ற நிறுவனத்தின் மூலம் மும்பையில் பயிற்சி அளித்து கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3,50,000 பணம் பெற்றுக் கொண்டனர். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு பயிற்சியும் அளிக்காமல், கப்பலில் வேலையும் வாங்கித் தராமல் ஏமாற்றி அந்த நிறுவனத்தை மூடிவிட்டு மீண்டும் NILES Gold India Pvt.Ltd. என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி மேற்படி மோசடி செயலை தொடங்கியுள்ளனர். மேலும் என்னை போன்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களிடம் சுமார் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அது தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த மோசடி தொடர்பாக சென்னை திருமுல்லைவாயல், தென்றல் மேற்கு நகரைச் சேர்ந்த பினுகுமரன் நாயர் (எ) ராஜகோபால் (38), பட்டாபிராமைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பினுகுமார் 2010-ம் வருடம் முதல் Centre for Marine என்கின்ற பெயரில் Bharathar Shipping and allied Services என்ற போலி நிறுவனம் மூலம் கப்பலில் வேலை வாங்கித்தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி வந்துள்ளார். அந்த நிறுவனத்திற்கு பிறகு மீண்டும் Niles Gold India Pvt.Ltd., மற்றும் Bharadarish Overseas Educational and Job Assistants ஆகிய பெயரில் போலி நிறுவன ங்களை நடத்தியுள்ளார். மேலும் அப்ரசைர் வேலை, மேனேஜர் வேலை கொடுப்ப தாகவும், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகள், அடையாள அட்டைகள் கொடுத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து பல மாநிலங்களில் பல கோடி சொத்துக்களை வாங்கி தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் மோசடி செயலுக்கு பயன்படுத்திய கைபேசிகள், படித்த இளைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள், போலி பணி நியமன ஆணைகள், நான்கு சக்கர வாகனம், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சுமார் 2,400 படித்த இளைஞர்களின் பயோடேட்டா, கல்வி சான்றிதழ்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த
குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் கலாராணி, காவலர்கள் ஆனந்த், இளங்கோவன், சஞ்சிவி மற்றும் செல்வி ஆனந்தி ஆகிய குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும், இதுபோன்ற குற்ற செயல்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இவ்வகையான போலி நபர்களை அணுகாமல், பதிவு பெற்ற நிறுவனங்களையும், அதன் உண்மை தன்மையும், ஆராய்ந்து செயல்படுமாறு சென்னை நகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.