சென்னை கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையாளரின் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மயிலாப்பூர், வைத்தியர் அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர்
ஜெயச்சந்திரன் (38). இவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையாளருக்கு கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் பணி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் பேச அங்குள்ள கற்பகம்பாள் கல்யாண மண்டபத்திற்கு செல்வது வழக்கம். நேற்று இரவு 9 மணிக்கு பணி முடித்து விட்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றவர் திடீரென அங்குள்ள அறையில் உள்ள மின் விசிறியில் வேஷ்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாகியும் தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி தமிழரசி சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார். அவர் சத்தம் போடவே அங்குள்ள பொதுமக்கள் ஜெயச்சந்திரன் உடலை இறக்கி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைச் செய்து விட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயச்சந்திரன் உடலை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்கள். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. இந்த தற்கொலை தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.