கண்டெய்னர் லாரிகளில் ரூ. 2.75 கோடி கொள்ளை: குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி
சென்னை தாம்பரத்தில் கண்டெய்னர் லாரிகளில் ஏற்றுமதிக்காக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை கொள்ளையடித்த 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.75 கோடி மதிப்புள்ள பொருட்களை மீட்டுள்ளதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பார்மா செல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட மருந்து பொருட்களில் கண்டெய்னர் லாரியிலிருந்து சீல் உடைக்கப்படாமல் ரூ. 98 லட்சம் மதிப்புள்ள 4800 கிலோ மருந்து பொருட்கள் திருடு போனது. அதே போல தாம்பரம் மெப்ஸ் நிறுவனத்தில் இருந்து கண்டெய்னரில் அனுப்பப்பட்ட 4800 கிலோ மருந்துப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. அது தொடர்பாக தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஆல்பின்ராஜ், சந்துரு ஆகியோர் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மாறன் என்கிற இளமாறன், சிவபாலன் மற்றும் வடசென்னையைச் சேர்ந்த கார்த்திக், முனியாண்டி, ராஜேஷ் மற்றும் சங்கர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.75 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. அது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது, ‘‘இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கண்டெய்னர் லாரியில் உள்ள சீலை அகற்றாமல் சீலுக்கு மேலும் கீழும் உள்ள போல்ட்டுகளை மட்டும் அகற்றி கண்டெய்னர் லாரிக்குள் இந்த பொருட்களின் ஒரு பகுதியை திருடிவிட்டு மீண்டும் புதிய போல்ட்டுகளை பொருத்தி நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருடிய பொருட்களை மீஞ்சூர் அருகிலுள்ள கவுண்டர்பாளையத்தில் சங்கர் என்பவர் உதவியுடன் பதுக்கி வைத்து முனியாண்டி மற்றும் ராஜேஷ் மூலமாக விற்று அதிக பணம் சம்பாதித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த கும்பல் மெப்ஸ் நிறுவனத்திடம் இருந்து கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட் களையும், ஆம்பூரில் இருந்து கண்டெய்னர் லாரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 3 ஆயிரம் ஜோடி காலணிகளையும், திருப்போரூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் (1100 யமஹா) கீ போர்டுகள் ஆகிவற்றையும் திருடியுள்ளனர்.
மேலும் இந்த கும்பல் கடந்த ஜூலை மாதம் ஆம்பூரிலிருந்து இத்தாலி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 1800 காலணிகளையும், ஆந்திராவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட இருந்த 1000 காலணிகளையும் திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் உதவியுடன் 5 பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள திருட்டு பொருட்களை மீட்டுள்ளோம். இதுபோன்ற குற்றங்கள் இனிவரும் காலங்களில் நடவாமல் தடுக்க, இது போன்ற விலையுயர்ந்த பொருட்களை சரக்கு வாகனத்தில் அனுப்பும் நிறுவனத்தினர், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர்களின் நன்னடத்தை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சரக்கு வாகனத்தில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு வாகனம் செல்லும் பாதை மற்றும் உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்று கண்காணிக்க வேண்டும்’’. இவ்வாறு அமல்ராஜ் தெரிவித்தார்.