கடலூர், சீர்காழியில் மழை பாதிப்பு பகுதிகளை பார்த்தார் ஸ்டாலின்: மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
கடலூர், நவ.14
வடகிழக்கு பருவமழையினால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (14 ந் தேதி) மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கும், நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகையும், 5 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 616 நிரந்தர மற்றும் தற்காலிக முகாம்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கனமழை ஏற்பட்டதன் காரணமாக தற்போது வரை 30 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 149 நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் இன்று, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் பரவனாற்றிலிருந்து வரப்பெற்ற மழைநீரினால் 140 ஹெக்டர் வேளாண் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளப் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளுக்கு உட்பட்ட கூரைவீடு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4100 – வீதம் 41 ஆயிரம் ரூபாயும், முழுமையாக கூரைவீடு சேதமுற்ற ஒரு பயனாளிக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஓட்டு வீடு பகுதி சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,200 – வீதம் 10,400 ரூபாயும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கு 16 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.72 ஆயிரத்து 400 – மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் வட்டம், வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சரிடம், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளையும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இப்பகுதிகளில் கனமழையால் ஒரு சிமெண்ட் ஷீட் வீடு மற்றும் 2 குடிசை வீடுகள் முழுவதும் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம்- வீதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பகுதியாக சேதமடைந்த 2 குடிசை வீட்டு பயனாளிகளுக்கு தலா ரூ.4,100 – வீதம் 8200 ரூபாய் நிவாரண தொகையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும், 5 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது முதலமைச்சர், பயிர் சேதங்கள், கால்நடை இழப்புகள், வீடுகளின் சேதங்கள் குறித்து கணக்கெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.