கடலூரில் பொறிவைத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு: சிக்கிய பலகோடி சாமி சிலைகள்: இருவர் கைது
cuddalore idol wing seazed lord perumal and amman idols
கடலூரில் பஞ்சாலோக சாமி சிலைகளை பதுக்கி விற்க முயன்ற இருவரை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பொறி வைத்துப் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பெருமாள் மற்றும் மாரியம்மன் பஞ்சலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகளை ஒரு கும்பல் விற்க முயல்வதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி டாக்டர் தினகரன், எஸ்பி ரவி மேற்பார்வையில் அது தொடர்பாக விசாரணை நடத்த ஏடிஎஸ்பி மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் பிரேமாசாந்தகுமாரி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், சந்தனகுமார் மற்றும் தலைமைக்காவலர் பரமசிவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில் விருத்தாசலம் இருப்புக்குறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பவர் அவரது வீட்டில் ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் மற்றும் பெருமாள் ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த ஐம்பொன் சிலைகளின் விலை ரூ. 2 கோடி என கூறி அவர்கள் விற்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து தனிப்படை அதிகாரிகள் சிலை வாங்குபவர்கள் போல மாறுவேடத்தில் மேற்கண்ட நபர்களிடம் அணுகினர்.
மகிமைதாசை சிலைகளை கொண்டு வரும்படியும் சிலைகளை பார்வையிட்டு அதற்குப் பிறகு விலை பேசி கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அதனையடுத்து மகிமைதாஸ் இருப்புக்குறிச்சி முதல் அரசக்குழி செல்லும் ரோட்டில் உள்ள இருதயசாமி வயல் அருகில் சிலைகளை கொண்டு வருவதாக தெரிவித்தார். அங்கு வைத்து அவரை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிலைகள் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த கே. பச்சமுத்து என்பவர் ஏதோ ஒரு கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் என கூறி கொடுத்ததாகவும், அந்த சிலைகளின் மதிப்பு ரூபாய் 2 கோடி என்று சொன்னதாகவும் அதை விற்று கொடுத்தால் ஒரு பங்கு கொடுப்பதாக அவர் சொன்னதாகவும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் ஈரோடு, கொடுமுடியில் வைத்து பச்சமுத்து என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானாந்தம் என்பவர் புராதானமான ஒரு கோவிலிருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் எனவும் இவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 2 கோடி எனவும் சொல்லி விற்பனை செய்வதற்காக கொடுத்ததாகவும் பச்சமுத்து கூறினார். முருகானந்தத்தை தேடிய அவர் தலைமறைவாகி விட்டார். அதனையடுத்து பச்சமுத்து, மகிமைதாஸ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான மகிமைதாஸ், பச்சமுத்து இருவரிடம் இருந்து ஒரு அடி உயரம் மற்றும் 3 கிலோ எடையுள்ள மாரியம்மன் பஞ்சலோக சிலை, முக்கால் அடி உயரம் உடைய பெருமாள் பஞ்சலோக சிலை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.