Take a fresh look at your lifestyle.

கடந்த 7 நாட்களில் 40 கிலோ கஞ்சா சிக்கியது: 49 பேர் கைது

Ganja & Drugs chennai police One week performance of raid against NDPS

61

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் நடத்திய சிறப்பு சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மூலம் நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 15.07.2022 முதல் 21.07.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40.2 கிலோ கஞ்சா, 80 கிராம் மெத்தம்பெட்டமைன் (Methampetamine), 250 கிராம் அல்ப்ராசோலம் (Alprazolam), 15 கிலோ எபிட்ரின் (Ephedrine), 35 லிட்டர் அசிடோன் (Acetone) ஆயில், 4 செல்போன்கள், ரொக்கம் ரூ.6,820/-, 2 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 1 லகுரக வாகனம் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் கடந்த 17ம் தேதி இரவு அங்குள்ள துறைமுகம் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் மெத்தம்படமைன், எபிட்ரின் மற்றும் Acetone Oil போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஐதா ரமேஷ் (42), தெலுங்கானா பயாஸ் அகமது ஷேக் (50) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிராம் மெத்தம்பெட்டமைன், 15 கிலோ எஃபிட்ரின், 35 லிட்டர் அசிட்டோன் ஆயில் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 16ம் தேதியன்று ராஜமங்கலம் போலீசார் கொளத்தூர், ரெட்டேரி, மீன் மார்க்கெட் அருகே அல்ப்ராசோலம் (Alprazolam) என்ற போதைப்பொருள் வைத்திருந்த ஏழுமலை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் எடை கொண்ட அல்ப்ராசோலம் (Alprazolam) போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

அதே போல சிஎம்பிடி போலீசார் 20ம் தேதியன்று கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெரு, நெசப்பாக்கம் சந்திப்பில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த தூத்துக்குடி கணேசன், கோட்டை (எ) சுந்தரம், மாரிச்செல்வம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல தரமணி போலீசார் 2 ஆட்டோக்களில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சதா (எ) சதானந்தம், மணிபாரதி, வேணுகோபால் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 500 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூ.3,700 மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், கடந்த 17.07.2022 அன்று காலை, சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையம் அருகே, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த திலீப்குமார், இந்திரதோயா ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள், 1 எடை இயந்திரம் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.