கடந்த 5 மாதங்களில் 124 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
in five months 124 accuseds in goondas shankar jiwal ordered
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கொலை, போக்சோ, மற்றும் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களில் இதுவரை மொத்தம் 124 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 20.05.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 85 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 29 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 4 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 124 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (எ) ராஜன் (எ) செல்வராஜன் (எ) தியாகராஜன்க்கம், சென்னை என்பவர் மீது லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 1 ¼ கோடி மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி (EDF-1) பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் 4 வழக்குகளும், R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 1 வழக்கும் உள்ளது.
குற்றவாளி தியாகராஜன் (எ) ராஜன் (எ) செல்வராஜன் (எ) தியாகராஜன், என்பவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு, EDF-1 பிரிவு ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மேற்படி நபரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 16.05.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி தியாகராஜன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே போல தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த திபாகரன் (எ) மணிகண்டன் ன்பவர் மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி போலியான நேர்முக தேர்வு நடத்தி பண மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதிக்கு பலமுறை அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதே போல சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் மீது 1 கொலை வழக்கு மற்றும் 15 திருட்டு வழக்களும் உதயா (எ) உதயகுமார் என்பவர் மீது கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும் ரசூல் (எ) முகமது ரசூல்லா என்பவர் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்கு உள்ளன. மேற்படி மூவரும் சேர்ந்து கடந்த 11.04.2022 அன்று ரமேஷ் (எ) அமுக்கா ராமேஷ் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, திபாகரன் (எ) மணிகண்டன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளரும், ஜெயசூர்யா என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும், அரவிந்தன், உதயா (எ) உதயகுமார், ரசூல் (எ) முகமது ரசூல்லா ஆகிய மூவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததனர். அதபேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இவர்கள் 5 நபர்களையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 19.05.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் நிறுவனம் தொடங்கியது போன்று போலியான ஆவணங்களை காண்பித்து ரூ.3.65 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி குற்றவாளி பாண்டியராஜன் என்பவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்படி நபரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (20.05.2022) அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி எதிரி பாண்டியராஜன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 14.05.2022 முதல் 20.5.2022 வரை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள் மற்றும் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 7 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.