Take a fresh look at your lifestyle.

கடந்த 3 மாதத்தில் 44 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை

125

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கொலை, வழிப்பறி மற்றும் வேலை வாய்ப்பு மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடப்பாண்டில் 3 மாதங்களில் இதுவரை 44 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1.1.2022 முதல் 25.3.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 30 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 1 குற்றவாளி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 44 குற்றவாளிகள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாரு:–

சென்னை செங்குன்றம், உதயகுமார் (எ) உதயா (27), ஆனந்த் (30) ஆகியோர் 27.02.2022 அன்று கொடுங்கையூர் பகுதியில் கோபி என்ற காய்கறி வியாபாரியை கத்தியால் வெட்டி கொலை செய்தனர். அது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயா மற்றும் ஆனந்த் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் உதயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், ஆனந்த் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும் உள்ளது.

மேலும் செங்குன்றம் குமார் (எ) வாட்டர் வாஷ் குமார் (31) கொளத்தூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் பொழிச்சலூரைச் சேர்ந்த கிரண் (41) என்பவர் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் உதயகுமார் (எ) உதயா மற்றும் ஆனந்த் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளரும், குமார் (எ) வாட்டர்வாஷ் குமார் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளரும், கிரண் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில் கமிஷனர் சங்கர்ஜிவால் 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த 24.03.2022 அன்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 19.03.2022 முதல் 25.03.2022 வரை கொலை வழக்கில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், வழிப்பறியில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.