சென்னை, ஆக. 24–
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு, 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டிஜிபி அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
‘‘தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளது. தமிழகம் எங்கே போகிறது’’ என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் தமிழக அரசை குற்றம் சாட்டி 2 பக்கங்களுக்கு தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் குறித்து பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார். இதனை ஊடகங்கள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டது.
அதனையடுத்து தமிழகத்தில் நடந்த கொலை விவரங்கள் சென்னை டிஜிபி அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:– ‘‘கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 2208.2022 அன்று 7 கொலைகளும், 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும் 2019 ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே முந்தைய 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு, 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.