ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த 1 மாதம் 10 நாட்களில் தொடர் குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட 31 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில், ஆவடி காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டதில் இருந்து சட்டம் ஒழுங்கு காவல் பணிகளில் பல புதிய முயற்சிகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் காவலர்கள் சைக்கிளில் ரோந்து சென்று திருடர்களை கண் காணிக்கும் புதிய காவல் பணி துவங்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவோர் மீது ஓராண்டு ஜாமினில் வெளிவராத குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆவடி காவல் ஆணையர கத்தில் நான்கு இடங்களில் ரவுடியிசத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை ரெட்ஹில்ஸ்சில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சோனாஜ் (22) மற்றும் பாடி, புதுநகர் தமிழ்செல்வன் (22), பட்டாபிராம் ரெட்டைமலை சீனிவாசன் (24), சரண் (22) ஆகிய 4 பேர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துணைக் கமிஷனர்கள் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஆய்வு செய்த சந்தீப்ராய் ரத்தோர் நால்வரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து உத்தர விட்டார். அந்த வகையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் இந்த 2023 ஆண்டின் துவக்க த்தில் இருந்து இதுவரை அதாவது 41 நாட்களில் 31 குற்றவாளிகள் மீது ‘குண்டர் தடுப்பு சட்டம்’ கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.