Take a fresh look at your lifestyle.

* கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்திய 836 பேர் கைது, 937 வழக்குகள் பதிவு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு தகவல்

tamilnadu civil supplies cid police statistics

54

கடந்த ஓராண்டில் ரேஷன் கடத்திய 836 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை டன் கணக்கில் பதுக்கி அதனை ஆந்திராவுக்கு கடத்தி அதிக விலைக்கு கொள்ளை லாபம் சம்பாதிப்பதை கடத்தல் ஆசாமிகள் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்த ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு தமிழகத்தில் குடிமைப்பொருள் வழங்கல்  குற்றப் புலனாய்வுப் பிரிவு எனப்படும் சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசார் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். சிவில் சப்ளைஸ் சிஐடி போலீஸ் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில் ரேஷன் கடத்தல் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமிகள் நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக சிவில் சப்ளைஸ் சிஐடி காவல்துறை செய்திக்குறிப்பு விவரம்:–

‘‘கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழக ஆந்திர மாநில எல்லையோர மாவட்டங்களில் அமைந்துள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீசாரால் மொத்தம் 937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 12540.87 குவிண்டால் பொதுவிநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. அப்போதைய பொது விநியோகத் திட்ட அரிசியின் மதிப்பு ரூ. 70 லட்சத்து 85 ஆயிரத்து 591 ஆகும். மேலும், இக்கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 836 குற்றறவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 23 நபர்கள் தடுப்புக் காவல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டதத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் உள்ள சிவில் சப்ளைஸ் காவல்துறையால் 544 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, 5809.38 குவிண்டால் பொதுவிநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும், இக்காலக் கட்டத்தில் 138 வாகனங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. இக்குற்றங்களில் ஈடுபட்ட 538 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே போல மே 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் 514 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, 2930.08 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 366 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் ஒரே ஒரு நபர் கைதானார். அந்த வகையில் கடந்த ஓராண்டில் சிவில் சப்ளைஸ் சிஐடி காவல்துறையினர் உணவுக்கடத்தல் தொடர்பாக துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இனி வரும் காலங்களிலும் இத்துறையின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் மற்ற மாநிலங்களுக்கு செல்வதையும் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இம்மாநிலத்திற்கு கொண்டு வரப்படுவதையும் தடுப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.