Take a fresh look at your lifestyle.

கடத்தல் தங்கத்தை ஒப்படைக்காததால் துபாய் இளைஞரை அறையில் அடைத்து சித்ரவதை: கடத்தல் ஆசாமி கைது

80

சென்னை, பாரிமுனை பகுதியில் உள்ள விடுதியில் துபாய் இளைஞரை அடைத்து வைத்து, இரும்பு கம்பியால் தாக்கி, துன்புறுத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, வெட்டுவாகோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (எ) செல்லப்பா, 28. துபாயில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த செல்வத்தை ஒரு கும்பல் சென்னை, மண்ணடியில் உள்ள தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இரும்பு கம்பி மற்றும் பைப்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர், இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அது தொடர்பாக செல்வம் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் கொலை முயற்சி, ஆட் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. செல்வம் துபாயில் இருந்து இந்தியா வருவதற்கு முன்பு அவருக்கு தெரிந்த நபரான அருண்பிரசாத் என்பவர் தங்கக்கட்டியை கொடுத்தனுப்பியுள்ளார். அதனை இந்தியா சென்றதும், அங்கு ஹக்கீம் என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார். அப்படி கொடுத்தால் பணம் தருவதாகவும் கூறினார். அதன்பேரில், செல்வம் தங்கக்கட்டியை வாங்கிக் கொண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வரும்போது, செல்வத்தின் நண்பர் அனீஸ்குமார் என்பவரிடம் அந்த தங்கக்கட்டியை கொடுத்து இந்தியா வந்ததும் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் அனீஸ்குமார் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தங்கக்கட்டியுடன் தப்பிச் சென்று விட்டார்.

இதனால், இந்தியா வந்த செல்வத்திடம் தங்கக்கட்டி இல்லாததால், ஹக்கீம் மற்றும் அவரது கூட்டாளிகள் செல்வம் (எ) செல்லப்பாவை கடத்திச் சென்றனர். ஒவ்வொரு ஊராக சென்று தங்கக்கட்டியுடன் தலைமறைவான நபர் குறித்து விசாரித்து, கடந்த மார்ச் முதல் வாரத்தில் சென்னை, மண்ணடியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில் செல்வத்தை அடைத்து வைத்துள்ளனர். தினமும் அவரை இரும்பு கம்பி மற்றும் பைப்பால் அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடல்நிலை மோசமான நிலையில் செல்வம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். போன்ற விவரங்கள் தெரியவந்தன.

அதனையடுத்து செல்லப்பாவை கடத்திச் சென்று அறையில் வைத்து தாக்கிய கும்பலைச் சேர்ந்த மண்ணடியைச் சேர்ந்த முகமது இம்தியாஸ், 28 என்பவரை கைது செய்தனர். விசாரணையில் முகமது இம்தியாஸ் செல்லப்பாவை அடைத்து வைத்து தாக்குவதற்கு மண்ணடியில் உள்ள விடுதியில் அறை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது இம்தியாஸ் விசாரணைக்குப் பின்னர், நேற்று (21.03.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள ஹக்கீம் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.