Take a fresh look at your lifestyle.

ஓ.பி.எஸ். ஆதரவாளரிடம் 113 ஆவணங்கள் மீட்பு: சிபிசிஐடி தகவல்

55

அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன 113 ஆவணங்களும் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த ஜூலை 11ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக அவர்கள் உள்ளே புகுந்தனர். ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் – கலவரம் வெடித்தது. இதில் ஓபிஎஸ்க்கு எதிராக ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 4 கலவர வழக்குகள் பதிவானது. கலவரத்தை தணிக்கவும், சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டவும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொரப்பட்டது. இந்த வழக்குகளை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்தார். இதையடுத்து 4 கலவர வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தது. சிபிசிஐடிக்கு மாற்றிய பிறகும் விசாரணை துவங்கப்படவில்லை. குற்றச்செயல் நடந்த இடத்தை பார்வையிடவில்லை என சென்னை ஐகோர்ட்டில் 6 ந் தேதி கூடுதல் மனுவை சண்முகம் அளித்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் இருதரப்பினரின் ஆதரவாளர்கள், அண்ணா தி.மு.க. தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த 22 ந் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க, இரு தரப்பினருக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அண்ணா தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் எடுத்துச் சென்றதாக கூறப்படும் 113 ஆவணங்களும் மீட்கப்பட்டதாக இன்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.