சென்னையில் கடந்த
27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று விழிப்புணர்வு விழாவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்தார். அதன் பேரில், ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தில், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பரவலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்றன. தோழன் மற்றும் யங் இந்தியா ஆகிய அமைப்பு சார இயக்கங்கள் இந்த வெற்றிகரமான பிரச்சாரத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டனர்.
சென்னை நகரின் 154 சந்திப்புகளில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் 7 நாட்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். 7 நாட்களில் 2.3 லட்சம் சென்னை வாசிகளால் நோ ஹான்கிங் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து உறுதி மொழி கையெழுத்து பெறப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சர் அலுவலகமும் ட்விட்டர் மூலமாக பிரச்சாரத்தை ஆதரித்து மின்னணு உறுதிமொழி எடுக்க வலியுறுத்தியது. இந்த பிரச்சாரத்தில் சென்னையை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அதிக எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் தானாக முன்வந்து சிக்னல்களில் ஹான்கிங் உறுதிமொழி எடுத்தனர். பிரபலமானவர்களின் பிரச்சாரமும் மற்றும் சமூக வலைதளங்களின் ஆதரவும் நம்முடைய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
281 வழக்குகளில், வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன, மேலும் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யங் இந்தியன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் பல்வேறு இடங்களில் டெசிபல் அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, சராசரி டெசிபல் விகிதத்தை 84.5 டெசிபல்களாக பதிவு செய்துள்ளது.
மேலும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளில் இருந்து 240 மாணவர்கள் கலந்து கொண்ட ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி சென்னை பெருநகர காவல் போக்குவரத்து துறையினர் மற்றும் போக்குவரத்து டிராபிக் வார்டன்கள் அமைப்பு மூலமாக நடத்தப்பட்டது. இந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (05.07.2022) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கபில் குமார் சி சரத்கர், தலைமை டிராபிக் வார்டன் ஹரிஸ் L மேத்தா, காவல் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.