ஒரே வாரத்தில் 16 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை
16 accused detain in goondas in chennai cop shankar jiwal action
சென்னை பெருநகரில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகள் உட்பட கொலை முயற்சி, கஞ்சா, போலி ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 குற்றவாளிகளை கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சென்னை நகரில் கடந்த 5 மாதங்களில் 148 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 03.06.2022 வரை சென்னை பெருநகரில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 33 பேர், கஞ்சா விற்பனை செய்த 9 பேர், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 பேர், பெண்களை மானபங்கம் செய்த 2 பேர் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 நபர் என மொத்தம் 148 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிராட்வேயைச் சேர்ந்த முகமது நவுஷாத் அலி (35) என்பவர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக யானைக்கவுனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல திருவல்லிக்கேணி கொலை குற்றவாளி பாலாஜி (28), நில அபகரிப்பு ஆசாமி மோகனசுந்தர் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் ஜெயமுருகன், குட்டி (எ) உமா மகேஸ்வரன், ரவி (எ) ரமேஷ், சகாய டென்சி ஆகிய 4 நபர்களும் சேர்ந்து மடிப்பாக்கம் பகுதியில் கடந்த 1.2.2022 கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற திரிபுராவைச் சேர்ந்த மாஷுக் மியா, ஜாகிர் உசேன், அனோவர் உசேன் ஆகிய 3 பேர் கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 10 பேரையும் அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் துணைக்கமிஷனர்கள் மூலம் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 10 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செங்குன்றத்தைச் சேர்ந்த முத்துச் சரவணன் (எ) தலை, கண்ணகி நகர் மணிகண்டன் (எ) லைவ் மணி, பெரியபாளையம் தணிகா (எ) தணிகாசலம், திருவிகர் நகர் கவுதமன், கெருகம்பாக்கம் சதீஷ்குமார் ஆகிய கெருகம்பாக்கம் ஆகிய 5 நபர்களும் சேர்ந்து மடிப்பாக்கம் பகுதியில் கடந்த 1.02.2022 அன்று செல்வம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் முத்துசரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளது. மேலும் ஸ்ரீதர் என்பவர் மீது ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததற்காக மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கண்ட 6 நபர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த வகையில் கடந்த 28.05.2022 முதல் 03.06.2022 வரையிலான ஒரு வாரத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேர், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு நபர், கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர், போலி ஆவணம் தயாரித்த 1 நபர் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 16 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.