ஒரே நாளில் ரூ. 96 ஆயிரம் அபராதம் வசூல்: போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு
சென்னை பெருநகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளில் ரூ. 96,000 அபராதம் வசூலித்த போக்குவரத்து காவல் ஆய்வாளரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து சிறப்பாக செயல்படும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி வருகிறார். சென்னை புனித தோமையர்மலை காவல் நிலைய போக்குவரத்து அமலாக்கபிரிவில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த போக்கு வரத்து விதிமீறல்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக 19ம் தேதியன்று சிறப்பு ஆய்வு மற்றும் தணிக்கை மேற்கொண்டார். இதில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் லகுரக வாகனம் என மொத்தம் 76 வாகனங்கள் மீது நிலுவையிலிருந்த 269 இ சலான் வழக்குகள் முடிக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் ரூ. 96 ஆயிரம் அபராத தொகை ஒரே நாளில் ஆன்லைன் மூலம் வசூல் ஆகின. ஒரே நாளில் இது போன்ற சிறப்பான காவல் பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.