Take a fresh look at your lifestyle.

ஒன்றரை மாதத்தில் 37 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

69

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 05 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 37 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் நன்ன டத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 குற்ற வாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தர வின் பேரில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 01.01.2023 முதல் 10.02.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 15 குற்ற வாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள் என மொத்தம் 37 குற்றவாளிகள் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளி திருவேற்காட்டைச் சேர்ந்த சத்யா (எ) சைக்கோ சத்யா, 22, என்பவர் கடந்த 22.01.2023 அன்று வீடு புகுந்து திருட முயன்ற குற்றத்திற்காக T-4 மதுரவாயல் காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டார். மேலும் இவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி என 10 குற்ற வழக்குகள் உள்ளது. பிரேம்குமார் (எ) பிளேடு பிரேம், வ/27, த/பெ.மனோகரன், எண்.564, “A” பிளாக், எம்.எஸ் முத்து நகர், கன்னிகாபுரம், புளியந்தோப்பு, சென்னை என்பவர் கடந்த 02.02.2023 அன்று கத்தியைக்காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போன் பறித்த குற்றத்திற்காக N-1 இராயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலு க்கு உட்படுத்தப்பட்டார். இவர் மீது ஏற்கனவே 6 வழிப்பறி மற்றும் 5 திருட்டு என 11 குற்ற வழக்குகள் உள்ள நிலையில் இவர் புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், ஏற்கனவே 1 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று வெளியே வந்ததும் தெரியவந்தது.

மேற்படி குற்றவாளி சத்யா (எ) சைக்கோ சத்யா, வ/22 என்பவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பிரேம்குமார் (எ) பிளேடு பிரேம் என்பவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் சங்கர் ஜிவால் மேற்படி 2 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 06.02.2023 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போல பெரும்பாக்கம் சதிஷ் என்பவர் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த இள வரசன், வ/30 என்பவரை கடந்த 10.01.2023 அன்று கொலைமுயற்சி செய்த சம்பவத்தில் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சதீஷ் உட்பட 2 நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் சதீஷ் மீது E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 1 கொலைமுயற்சி, 2 அடிதடி என 3 குற்ற வழக்குகள் உள்ளது.

மேலும் தினேஷ் (எ) காவா தினேஷ், வ/22, த/பெ.மேகநாதன், எண்.651, போஜராஜன் நகர் 1வது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவர் சென்னை, கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் (எ) கௌரி சங்கர் என்பவரை கடந்த 08.01.2023 அன்று கொலை செய்ய முயன்றதால் H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் தினேஷ் (எ) காவா தினேஷ் மீது ஏற்கனவே 1 கொலைமுயற்சி, அடிதடி, வழிப்பறி என 6 குற்ற வழக்குகள் உள்ளது. இவர் H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். கல்யாணசுந்தரம், வ/26, /27A, ஆளவந்தான், மதிச்சியம், மதுரை என்பவர் கடந்த 11.01.2023 அன்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அண்ணாநகர் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கல்யாணசுந்தரம் மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் உள்ளது.

மேற்படி குற்றவாளிகள் சதிஷ், தினேஷ் (எ) காவா தினேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 07.02.2023 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் மூவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், தி.நகர், திருவல்லிக்கேணி மற்றும் கொளத்தூர் ஆகிய காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள், மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் 8 குற்றவாளிகள் என மொத்தம் 15 குற்றவாளிகள் கடந்த 04.02.2023 முதல் 10.02.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்மந்தப்பட்ட துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை (Bound Down) விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.