ஏதென்ஸ்
2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 85 பேர் படுகாயமடைந்தனர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்று கொண்டி ருந்த போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்து ள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 194 பயணிகள் மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 4 பெட்டிகள் முழுதும் எரிந்து சாம்பலானது. மோதிய வேகத்தில் ஜன்னல் அருகில் உட்கார்ந்திருந்த பயணிகள் தூக்கி வெளியே வீசப்பட்டனர். பயணிகளின் அலறல் சத்தம் அப்பகுதியை சோகத்தில் உறைய வைத்தது. விபத்து பற்றிய தகவல் கிடைத்தது பயணிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். இந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.