Take a fresh look at your lifestyle.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 1,214 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்; வர்னர் தமிழிசை வழங்கினார்

80

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு ரையாற்றினார். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியின் தலைவர் ரவி பச்சைமுத்து, தாளாளர் ஹரிணி, முதல்வர் வாசுதேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் (பொறுப்பு) கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவிலேயே இளம் வயது கவர்னராக தெலுங்கானாவிற்கு பொறுப்பேற்ற பிறகு இதனை எப்படி சமாளிப்பார் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், அதனை எனது கல்வியறிவு மூலம் வெற்றி கொண்டேன். அது போலவே, புதுச்சேரியின் கவர்னராக கூடுதல் பொறுப்பு க்கு வந்த பிறகு, இதனை எப்படி சமாளிப்பார் என்று மீண்டும் விமர்சனம் செய்தனர். ஆனால், அதனையும் எனது கல்வியறிவு மூலம் வெற்றிக் கொண்டேன். அதுபோலவே, மாணவர்களும், தங்களின் கல்வி அறிவு மூலம் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதாரணமானவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களை ஆசிரியர்கள் தான் ஊக்கம் கொடுத்து, செதுக்கி சமூகத்தில் பெரிய மனிதர்களாக மாற்று கின்றனர். ஆதலால், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றும் மரியாதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் அடுத்த 2025ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்டு வர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அதுபோல, மாணவர்களும் தங்களின் இலக்குகளை பெரிய அளவில் வைக்க வேண்டும்.

இந்தியா இதற்கு முன்பு பிற நாடுகளிடம் தடுப்பூசிக்கு கையேந்தி இருந்தது. ஆனால், 150 நாடுகளுக்கு இந்தியா தனது உள்நாட்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது. இவை அனைத்தும் கல்வி கற்ற அறிஞர்களாளே சாத்தியமானது. இதுபோல, மாணவர்களும் நமது நாட்டை முன்னேற்றும் வகையில் பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்ய வேண்டும் என்றார். மேலும், மாணவர்கள் எப்போதும், உழைப்பு என்ற தாரக மந்திரத்தை கையாண்டு செயல்பட்டால் எந்த நிலையிலும் வெற்றி அடைய முடியும்”. இவ்வாறு கவர்னர் பேசினார்.

இதனையடுத்து, நிறுவனர் பாரிவேந்தர் பேசுகையில், “இந்தியாவில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்விச் சேவை வழங்க ஆர்வம் கொண்டிருந்தேன். அதனால், ஆசிரியராக பணியாற்றிய காலத்திலே கல்வி நிறுவனம் தொடங்க முயற்சி செய்து 1968ஆம் ஆண்டு சிறிய விதையை போட்டேன். அதன் முயற்சிக்கு பலனாகவே, இன்று, 35 கல்லூரிகள், 5 பல்கலைக்கழகங்களைக் கொண்டு இந்தியாவிலேயே சிறந்த, பெரிய கல்வி நிறுவனமாக எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் திகழ்ந்து வருகிறது என்றார்.