Take a fresh look at your lifestyle.

எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவிப்பு

60

அண்ணா தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்‌ விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே உள்ள எம்.ஜி.ஆரின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து தொண்டர்களும் பொதுமக்களும் வணங்கினார்கள். ஏராளமான இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி புடவை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை அண்ணா தி.மு.க.வினர் வழங்கினார்கள். எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் மற்றும் கொள்கை விளக்க பாடல்கள், அவரது பேச்சு ஆகியவை ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.

சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழக நுழைவு வாயில் பழங்கள், கரும்பு, வாழை போன்றவற்றால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அண்ணா தி.மு.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அங்கே குழுமி இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தலைமை கழகம் வந்த அண்ணா தி.மு.க. இடைக்காலப்‌ பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் எழுச்சி மிகு வரவேற்பு அளித்தார்கள். மியூசிக் அகாடமியிலிருந்து தலைமைக்கழகம் வரை சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் இருபக்கமும் குழுமி இருந்தனர். எடப்பாடி பழனிசாமி அங்கு வந்த போது வாழ்த்து கோஷம் எழுப்பியும், மலர் தூவியும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால் எடப்பாடியின் கார் மெல்ல ஊர்ந்து வந்தது. தலைமை கழகம் வருவதற்கே அங்கே இருந்து 30 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தலைமை கழகம் வந்த போது எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து, சால்வைகளை வழங்கினார்கள்.

வரவேற்பை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர், எம்‌.ஜி.ஆர்‌. சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து வழங்கினார். பின்னர் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி னார்‌. தொடர்ந்து, தலைமைக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ மலர்‌ தூவி மரியாதை செலுத்தி னார்கள்‌. அதனையடுத்து, தலைமைக்‌ கழக எம்‌.ஜி.ஆர்‌. மாளிகை கூட்ட அரங்கில்‌, எடப்பாடி பழனிசாமி, கழகக்‌ கொடிக்‌ கம்பத்தை சரிசெய்யும்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில்‌ அகால மரணமடைந்த, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்‌, மதுராந்தகம்‌ நகர 4 வது வார்டு கழக துணைச்‌ செயலாளர்‌ எஸ். செல்லப்பன்‌ குடும்பத்திற்கு கழகத்தின்‌ சார்பில்‌ குடும்ப நல நிதியுதவியாக 5 லட்சம்‌ ரூபாய்க்கான வரைவோலையை அவரது மனைவி ஜெகதாம்பாளிடம்‌ வழங்கினார்.

கழகத்தின்‌ மீது மிகுந்த விசுவாசம்கொண்டு, கடந்த 38 ஆண்டுகளாக புதுடெல்லி மாநிலக்‌ கழக அலுவலகத்தில்‌ பணியாற்றி மரணமடைந்த என். சந்திரசேகரன்‌ குடும்பத்திற்கு, கழகத்தின்‌ சார்பில்‌ குடும்ப நல நிதியுதவியாக 10 லட்சம்‌ ரூபாய்க்கான வரைவோலையை அவரது மனைவி ஷியாமளா தேவியிடம்‌ வழங்கினார். ஆகமொத்தம்‌ 15 லட்சம்‌ ரூபாய் க்கான வரைவோலைகளை வழங்கி, மரணமடைந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ கூறினார்‌.

தங்களுடைய குடும்பங்களின்‌ சூழ்நிலையை அறிந்து, கருணை உள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய, எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியுதவியை பெற்றுக்கொண்டவர்கள்‌ தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொண்டனர்‌. அடுத்த நிகழ்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி, கழக கொள்கை பரப்பு துணைச்‌செயலாளர்‌ சா.கலைப்புனிதன்‌ எழுதிய “மக்கள்‌ திலகம்‌ எம்‌.ஜி.ஆரின்‌ மாண்புகள்‌” என்ற நூலினை வெளியிட்டார்‌. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம்‌, கலைப்புனிதன்‌, உலகிலேயே அதிகமான 26 எம்.ஏ. பட்டங்கள்‌ பெற்று சாதனை படைத்ததற்கு லண்டன்‌ வேர்ல்ட்‌ புக்‌ ஆப்‌ ரெக்கார்ட்ஸ்‌ வழங்கிய உலக சாதனை சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்‌.

நிறைவாக, எடப்பாடி பழனிசாமி எம்‌.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்‌.ஜி.ஆர்‌. மன்றத்தின்‌ சார்பில்‌ தயார்‌ செய்யப்பட்டிருந்த 106 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக நிர்வாகிகளுக்கும்‌, தொண்டர்களுக்கும்‌ வழங்கினார்‌. இதற்கான ஏற்பாட்டினை, அனைத்துலக எம்‌.ஜி.ஆர்‌. மன்றத்‌ தலைவரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான டி.கே.எம். சின்னையா செய்திருந்தார்‌. இந்த நிகழ்ச்சிகளை, கழக இலக்கிய அணிச்‌ செயலாளரும்‌, செய்தித்‌ தொடர்புச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான வைகைச்செல்வன்‌ தொகுத்து வழங்கினார்‌.