சென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் நண்பர்களுக்குள் மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 70வது பிளாக்கைச் சேர்ந்த மாதவன், 21. இவரது நண்பர்கள் தீபன்ராஜ், ஆகாஷ்குமார் உட்பட 5 நபர்களுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் (27.02.2022) இரவு சுமார் 07.30 மணியளவில், வியாசர்பாடி, 64வது பிளாக் பின்புறம் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, மாதவனுக்கும் தீபன்ராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது வாக்குவாதம் முற்றிய நிலையில், தீபன்ராஜ், ஆகாஷ் உட்பட 5 நபர்களும் சேர்ந்து மாதவனை கத்தி மற்றும் கையால் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் மாதவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மாதவன் மேற்படி சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட தீபன்ராஜ், ஆகாஷ்குமார், முருகேசன், சசிதரன் ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மற்றும் காயமடைந்த மாதவன் ஆகியோர் நண்பர்கள் என்பதும், மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீபன்ராஜ் உட்பட 5 நபர்கள் சேர்ந்து மாதவனை கத்தி மற்றும் கைகளால் தாக்கியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மேலும் பிடிபட்ட இளஞ்சிறார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.