Take a fresh look at your lifestyle.

எக்மோரில் ஆந்திர மாநில செல்போன் கொள்ளை கும்பல் 6 பேர் கைது

mobile robbery gang 6 arrested in chennai egmore

99

சென்னையில் செல்போன் கொள்ளையை அரங்கேற்றிய ஆந்திராவைச் சேர்ந்த திருட்டுக் கும்பல் 6 பேரை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை , புதுப்பேட்டை , சியாலி தெருவில் வசிப்பவர் கில்டர்ஸ் (50). நேற்று (24.09.2022) மாலை 3 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 நபர்கள் கில்டர்ஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். அதே போல சென்னை, பல்லவன் சாலையைச் சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரிடமும் இரவு 7.30 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். கில்டர்ஸ், செந்தில்குமார் இருவர் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை கைது செய்ய திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் சஞ்சய் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தனிப்படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அதனையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக ஆந்திரா மாநிலம் கோதாவரியைச் சேர்ந்த ராஜேஷ் (27), சந்தோஷ் (26), விசாகப்பட்டினம் கனகராஜ் (35), மது (19) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். மேலும் செந்தில்குமாரிடம் செல்போனை திருடிய வழக்கில் யசோதா (60) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ரொக்கம் ரூ. 300 மற்றும் 1 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் ஆந்திராவிலிருந்து சென்னை வந்து அம்பத்தூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் செல்போன்களை திருடி வந்துள்ளனர். விசாரணக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.