Take a fresh look at your lifestyle.

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

83

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது.

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காள தேசமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர் லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிக ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் கேப்டவுனில் நேற்று நடந்த தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் இறங்கின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிஸ்மா மரூப் 68 ரன்களும் (55 பந்து, 7 பவுண்டரி), ஆயிஷா நசீம் 43 ரன்களும் விளாசி அணியின் சவாலான ஸ்கோருக்கு உதவினர். இந்திய தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 2 விக்கெட்டும் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு யாஷ்திகா பாட்டியாவும் (17 ரன்), ஷபாலிவர்மாவும் (33 ரன்) அருமையான தொடக்கம் தந்தனர். ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (16 ரன்) ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தான் வீராங்கனைகள் கடும் நெருக்கடி கொடுத்த போதிலும் 4-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜெமிமா ரோட்ரிக்சும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் பொறுப்புடன் விளையாடினர். கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ரிச்சா கோஷ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி தெறிக்கவிட்டு நெருக்கடியை தணித்தார். இதைத் தொடர்ந்து 19-வது ஓவரில் ரோட்ரிக்ஸ் தனது பங்குக்கு 3 பவுண்டரி விரட்ட இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை போட்டியை அமர்க்களமாக தொடங்கியுள்ளது.