Take a fresh look at your lifestyle.

உலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி உருகுவே- – தென்கொரியா ஆட்டம் ‘டிரா’

74

உலக கோப்பை போட்டியில் தனது தொடக்க லீக் ஆட்டங்களில் ஒரு கோல் அடித்து பெல்ஜியம், சுவிட்சர்லாந்து அனிகள் வெற்றி பெற்றன.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நேற்று 4-வது நாளில் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, 41-வது இடத்தில் இருக்கும் கனடாவை எதிர்கொண்டது. பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் ரோம்லு லுகாகு காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

32 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கனடா தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு பெல்ஜியம் அணியின் கோல் எல்லையை அவ்வப்போது முற்றுகையிட்டு நெருக்கடி அளித்தது. 9-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெரோஸ்கா, கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் கனடாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அருமையான வாய்ப்பை கனடா கோட்டை விட்டது. பெனால்டியில் அல்போன்சா டேவிஸ் உதைத்த பந்தை பெல்ஜியம் கோல்கீப்பர் திபாத் கோர்ட்டோயிஸ் பாய்ந்து விழுந்து தடுத்து நிறுத்தினார்.

கனடா அணி தொடர்ந்து தாக்குதல் பாணியை கையாண்டது. அதே நேரத்தில் பெல்ஜியம் வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். இரு அணியினரும் சில வாய்ப்புகளை தவற விட்டனர். 44-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. நீண்ட தூரத்தில் இருந்து டாபி ஆல்டர்வியர்டு அடித்த பந்தை மிக்கி பட்ஷாயி கோலாக்கினார். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாகவும் அமைந்தது. அதன் பிறகு இரு அணிகளும் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பெல்ஜியம் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. 2-வது முறையாக உலக கோப்பை போட்டியில் கால்பதித்து இருக்கும் கனடா அணி இதுவரை உலக கோப்பையில் கோல் அடித்ததில்லை என்ற பரிதாபம் நீடிக்கிறது. இதேபோல் நேற்று மாலை ‘ஜி’ பிரிவில் நடந்த சுவிட்சர்லாந்து-கேமரூன் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டன் கிரானிட் ஸாகா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பிரீல் எம்போலோ கோல் வலைக்குள் திணித்தார். கேமரூன் வீரர்கள் இலக்கை நோக்கி நிறைய ஷாட்கள் அடித்த போதிலும், சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோம்மெர் அற்புதமாக செயல்பட்டு தங்கள் அணியை காத்தார். முடிவில் சுவிட்சர்லாந்து 1- 0 என்ற கோல் கணக்கில் கேமரூனை சாய்த்தது. உலக கோப்பை போட்டி தொடரில் கேமரூன் அணி தனது கடைசி 8 ஆட்டங்களில் தொடர்ச்சி யாக தோல்வியை சந்தித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

சுவிட்சர்லாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட 25 வயதான பிரீல் எம்போலோ கேமரூன் நாட்டில் பிறந்தவர் ஆவார். அங்கிருந்து 5 வயதில் தனது தாயாருடன் பிரான்சுக்கு இடம் பெயர்ந்த அவர் அதன் பிறகு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்று கடந்த 2014-ம் ஆண்டு அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். அங்கு உள்ளூர் போட்டிகளில் ஆடி தேசிய அணிக்கு தேர்வானார். இந்த உலக கோப்பையில் தனது சொந்த நாட்டு அணிக்கு எதிராக கோல் அடித்த எம்போலோ கொண்டாட்டத்தை தவிர்த்து அமைதியான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ‘எச்’ பிரிவில் அல்ரையானில் உள்ள எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவே, தென்கொரியாவை எதிர்கொண்டது. இரு அணியினரும் இலக்கை நெருங்கி வந்தார்களே தவிர அதை கோலாக்க முடியவில்லை. 33-வது நிமிடத்தில் தென்கொரியாவின் உஜ்மோ ஹவாங் பந்தை கம்பத்திற்கு மேல்வாக்கில் அடித்து பொன்னான வாய்ப்பை நழுவ விட்டார். இதே போல் உருகுவேயின் டார்வின் நுனெசும் நல்ல வாய்ப்பை வீணடித்தார். நட்சத்திர வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் இருந்தும் உருகுவே அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கடைசி வரை இதே நிலை நீடித்ததால் இந்த ஆட்டம் கோலின்றி (0 -0) ‘டிரா’ ஆனது. நடப்பு தொடரில் கோல் இன்றி முடிந்த 4-வது ஆட்டம் இதுவாகும்.