Take a fresh look at your lifestyle.

உலக கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட் -அவுட்டில் ஜப்பானை வீழ்த்திய குரோஷியா

72

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஜப்பானை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு அல் ஜனாப் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்றில் குரோஷியாவும், ஜப்பானும் கோதாவில் குதித்தன. கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய அணியான குரோஷியாவுக்கு, ஜப்பான் வீரர்கள் எல்லா வகையிலும் ஈடுகொடுத்து ஆடியதால் களத்தில் அனல் பறந்தது. 43-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை ஜப்பானின் டைய்ஸன் மைடா கோல் போட்டு அதிர்ச்சி அளித்தார். பிற்பாதியில் 55-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிச் தலையால் முட்டி கோலடித்து சமனுக்கு கொண்டு வந்தார். இதே நிலையே கடைசி வரை நீடித்தது.

வழக்கமான நேரத்தில் ஆட்டம் சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. இந்த உலக கோப்பையில் கூடுதல் நேரத்துக்கு நகர்ந்த முதல் ஆட்டம் இது தான். இதில் 105-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மிடோமா அடித்த சக்திவாய்ந்த ஷாட்டை, குரோஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் துள்ளிகுதித்து பந்தை வெளியே தள்ளினார். இதே போல் 120-வது நிமிடத்தில் குரோஷியாவின் மாஜேர் அடித்த ஷாட் மயிரிழையில் கம்ப த்திற்கு வெளியே ஓடியது. கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கொண்டு வரப்பட்டது.

இதன்படி ஜப்பானுக்கு வழங்கப்பட்ட முதல் 4 வாய்ப்புகளில் 3-ல் உதைக்கப்பட்ட பந்தை குரோஷியா கோல் கீப்பர் லிவாகோவிச் துல்லியமாக பாய்ந்து விழுந்து தடுத்து பிரமாதப்படுத்தினார். ஜப்பான் அணியில் தகுமா அசானோ தவிர மற்றவர்கள் வாய்ப்பை வீணாக்கினர். அதே சமயம் குரோஷியாவின் முதல் 4 வாய்ப்புகளில் 3-ல் மரியோ பசாலிச், பிரோஜோவிச், நிகோலா விலாசிச் ஆகியோர் கோலாக்கினர். மார்கோ லிவஜா அடித்த பந்து மட்டும் கம்பத்தில் பட்டு நழுவியது. திரில்லிங்கான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷிய அணி 3- 1 என்ற கணக்கில் ஜப்பானை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது. கால் இறுதியில் குரோஷிய அணி, பிரேசில் அல்லது தென்கொரியா ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.