Take a fresh look at your lifestyle.

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்

73

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முன்னதாக 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.  20 பேர் கொண்ட மருத்துவ குழு வினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த போட் டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நடிகர் சூரி உள்ளி ட்டோரும் பங்கேற்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அடக்கினர். ஒரு சில காளைகள் துணிந்து நின்று வீரர்களை மிரட்டியது. அதனை பார்த்ததும் வீரர்கள் பதுங்கி சென்றனர். அந்த காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதே போல் மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர், மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. இதே போல சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பாக கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளில் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் கருப்பன் மற்றும் கொம்பன் காளைகளும் அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் பங்கேற்றது. வாடி வாசலில் இருந்து பாய்ந்து வந்த அந்த காளையை வீரர்கள் அடக்க முற்பட்ட நிலையில் யாருடைய கையிலும் சிக்காமல் அந்த காகைள் கொத்து காட்டியது. இதனால் அந்த காளைகள் வெற்றிபெற்றது. நடிகர் சூரியின் சார்பில் 2 மாடுகள் களமி றங்கின. 3வது சுற்றில் களமிறங்கிய சூரியின் காளை பிடிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய காளை வெற்றிபெற்றது. இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வெற்றிபெற்றது.

4ஆம் சுற்றின் முடிவில், 275 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 13 காளைகளை பிடித்த அபி சித்தர் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 9 காளைகளை பிடித்த அஜய்யும், முன்றாவது இடத்தில் 7 காளைகளை பிடித்த கோபால கிருஷ்ணனும், ரஞ்சித்தும் இருந்தனர். முதல் சுற்று முடிவில் 62 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயம் அடைதனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்க ப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேல ரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில,மற்றும் சுற்றுலா பார்வையாளர்களுடைய திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதி பரபரப்பானது. இதைத் தொடரந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏராளமான நபர்கள் காயமடைந்தனர்.