உயிரை மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு நன்றி சொன்ன சிறுவன்
boy thanks to dgp sylendrababu
கடலில் மூழ்கி மயங்கிய சிறுவனுக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் நேரில் சந்தித்து நன்றி சொன்ன நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு தினமும் மாலை வேளையில் டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள மெரினா பீச்சில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 14ம் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வழக்கம் போல சைலேந்திரபாபு மெரினா கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் என்ற சிறுவன் கடல் அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்டான். மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்த சிறுவனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நெஞ்சில் கைவைத்து அமுக்கி ஆக்சிஜன் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தார். அதனையடுத்து சிறுவன் கண் விழித்தான். உடனடியாக போலீஸ் வாகனம் மூலம் சிறுவன் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் 16ம் தேதியன்று மருத்துவமனைக்கு நேரில் சென்ற சைலேந்திரபாபு அவன் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிறுவன் முகேஷ் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனான். இந்நிலையில் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய தன்னை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபுவை சிறுவன் முகேஷ் நேற்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். நாளை முதல் பள்ளிக்கு செல்ல உள்ளதாக முகேஷ் கூறியதை கேட்டு டிஜிபி சைலேந்திரபாபு மகிழ்ந்து சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.