திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சாரக்குழு செயலாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி சமீபத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.