தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35- வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில், சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் கவர்னரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர் கவர்னரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.
பின்னர் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரும், தனது தந்தையுமான ஸ்டாலின் காலில் விழுந்து உதயநிதி வாழ்த்து பெற்றார். பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் மண்டபத்தில் சுமார் 150 இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த அவர், தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக தமிழக முதல்வரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். வேப்பேரியில் உள்ள பெரியார் நகர் நினைவிடத்துக்கு சென்று அங்கு உதயநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.