ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அண்ணா தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அண்ணா தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்து உள்ளனர்.
இத்தகைய பரபரப்பான தேர்தல் களத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் தீவிர ஆலோசனையில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு உள்ளார். அவர் நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அண்ணா தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச் சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, பாலகிருஷ்ணன் உள்பட கட்சியினர் பலரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 வரை நடைபெற்றது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி. ராமலிங்கம் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளதால் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அண்ணா தி.மு.க. முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செயலா ளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் தலைமையில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழு மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத் துக்கு அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும்.
கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தி.மு.க.காரர்களே கருதுகின்றனர். 2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை. தி.மு.க.காரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்க முடியும். அ.தி.மு.க.காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம். 5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.
ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது. தி.மு.க. ஆட்சியில் வெல்லத்தை உள்ளூரில் கொள்முதல் செய்தால் கமிஷன் பெற முடியாது என்பதால் வெளி மாநிலத்தில் இருந்து வெல்லத்தை பெற்று பயன்படுத்த முடியாத வெல்லத்தை வழங்கினார்கள். திராவிட மாடல் என்பது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான்.
3 நாட்களுக்குள் வாக்காளர்கள் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும். நமக்கு சோதனை புதிதல்ல. பல சோதனைகளை வென்ற இயக்கம். சிலர் எட்டப்பன்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு பணி செய்து வருகின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். சிலர் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை தோற்கடித்த வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேளுங்கள். இன்றே தேர்தல் பணியில் ஈடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.