Take a fresh look at your lifestyle.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 முனை போட்டி: 11 அமைச்சர்கள் பிரச்சாரம்

57

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 முனை போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி யிடுகிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனியாக போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் பிரச்சாரத்தை துவக்கி விட்டனர். 11 அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 27 ந்தேதி நடைபெறுகிறது. வரும் 31 ந் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி, மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. 1480 மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் உள்ளது. இதில் 5 சதவீத யந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவில் சோதனை செய்யப்பட்டது. இதில் 1 சதவீத யந்திரங்களில் 1200 வாக்குகளுக்கு அதிகமாகவும், 2 சதவீத யந்திரங்களில் 1000 வாக்குகளும், மீதம் உள்ள யந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது வரை வாக்குப்பதிவு யந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன. இந்தப் பணி முடிந்ததும் அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

இந்த தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப் படும். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற் பாடுகளை தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் வைக்கப்படும் அறை மற்றும் அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் கொண்டு வரும் வழித்தடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல கம்புகளால் சாரம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934 பேர். பெண்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 987 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 15 பேர்ஆகும். காங்கிரஸ், எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், சீமான், தே.மு.தி.க., டிடிவி தினகரன் என 6 முனை போட்டி நிலவும் என தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவும், வாழ்த்தும் பெற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். தனது கட்சி நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக கமல்ஹாசன் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார். பாரதீய ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்து விட்டன. எனவே பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அண்ணா தி.மு.க.தான் என்று அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார். எனவே அண்ணா தி.மு.க.வுக்குத்தான் பாரதீய ஜனதாவின் ஆதரவு என்பது உறுதியாகிவிட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லி மேலிடத்தில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா தி.மு.க.வினரும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்கள். இன்று மாலையில் அண்ணா தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

இந்த தேர்தலில் தாங்கள் போட்டியிடுவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறியுள்ளார். யார் வேட்பாளர் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளராக மாவட்ட செயலாளர் எஸ். ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். சீமானும் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள், ஈரோடு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பதாக சரத்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இன்றைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 முனை போட்டி இருக்கும் என தெரிகிறது. அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று 2வது நாளாக அண்ணா தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுத்தார்கள். அமைப்பு செயலாளர் எஸ். கோகுல இந்திரா அதனை பெற்றுக் கொண்டார்.