ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது. வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று சேலத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத் தி னார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட தங்களது விருப்ப த்தை தெரிவித்தார்கள். அதனை ஏற்றுக்கொண்டோம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று தெரிவித்தார்.
அண்ணா தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் 23 ந் தேதி ஆலோசனை நடத்து கிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 31 ந் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.
தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, அண்ணா தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அண்ணா தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித் தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர் களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அண்ணா தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அண்ணா தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்க மாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா. வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வோட்டியிடுவதால் வேட்பாளர் குறித்து இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும், உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011, 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் இங்கு கே.வி.ராமலிங்கம் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.