Take a fresh look at your lifestyle.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி சரித்திரம் படைக்கும் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி

104

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி சரித்திரம் படைக்கும் வெற்றியாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், அண்ணா தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக செங்கோட்டையன் தலைமையில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி நியமித்து இருக்கிறார். இவர்களுடன் கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணிக்குழுவில் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்து கொடுத்திருக்கிறார். இந்த குழுவின் தலைவராக உள்ள கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி முடிவு எப்படி வரப்போகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த தேர்தல் திண்டுக்கல்லில் எப்படி எம்.ஜி.ஆர் ஒரு திருப்புமுனையை காட்டினாரோ அதேபோல் ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி என்பது அண்ணா தி.மு.க.வுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும். இன்று தனித்தே களத்தில் நிற்கிறோம். அதுமட்டுமல்ல நமது கூட்டணியைப் பொறுத்தவரை இரண்டு மூன்று நாட்களுக்குள் யார் யார் அமையப் போகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இன்று எல்லோரும் இப்படி அண்ணா திமுக அணி அணியாக பிரிந்து கிடக்கிறதே என்றுகூட சொல்கிறார்கள். 98.5 சதவிகிதம் நாம் ஒரே அணியில் எடப்பாடி தலைமையில் இருக்கிறோம். இந்த வெற்றி சரித்திரம் படைக்கும் வெற்றியாக இருக்கும் என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கூட்டணி குறித்து 2,3 நாட்களில் முடிவு அறிவிக்கபடும் என அவர் கூறினார். கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் கூறினார்.

நேற்றே தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம். தேர்தல் களத்தில் பணியின் வேகம் மக்களை அணுகும்முறை, நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். மக்களின் மனநிலை எங்களுக்கு ஆதரவாக உள்ளது என்று செங்கோட்டையன் கூறினார்.
அண்ணா தி.மு.க. வேட்பாளர் குறித்து இன்னும் ஓரிரு நாளில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.