வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷனின் இரட்டை சதம், விராட்கோலியின் சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டான் தாஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர்.அணியின் ஸ்கோர் 15 ரன்னாக (4.1 ஓவரில்) இருக்கையில் ஷிகர் தவான் (3 ரன்) மெஹிதி ஹசன் மிராஸ் சுழலில் எல்.பி. டபிள்யூ. ஆனார். இதனை அடுத்து விராட்கோலி, இஷான் கிஷனுடன் இணைந்தார். இருவரும் நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடி வேகமாக ரன்களை உயர்த்தினர்.
வேகமாக மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 85 பந்துகளில் முதல் சதத்தை கடந்தார். அடுத்து அவர் 126 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் அதி வேகமாக இடத்தை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். ஸ்கோர் 305 ரன்னாக உயர்ந்த போது (35.5 ஓவரில்) இஷான் கிஷன் (210 ரன்கள், 131 பந்து, 24 பவுண்டரி, 10 சிக்சர்) தஸ்கின் அகமது பந்து வீச்சில் லிட்டான் தாஸ்சிடன் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன்-விராட்கோலி ஜோடி 290 ரன்கள் திரட்டி யது. ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப் பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் களம் புகுந்தார். தொடக்கத்தில் விராட்கோலி ஒரு ரன்னில் இருக்கையில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்து வீச்சில் லிட்டான் தாஸ் எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதற்கு அந்த அணி பெரிய விலை கொடுக்க வேண்டிய தானது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட விராட்கோலி 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் அடித்த 44-வது சதம் இதுவாகும். பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 91 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் 20 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 409 ரன்கள் குவித்தது. இதன் மூலம் வங்காளதேசத்துக்கு எதிராக 400-க்கு அதிகமான ரன்கள் குவித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. குல்தீப் யாதவ் 3 ரன்னுடனும், முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
பின்னர் 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 34 ஓவர்களில் வங்காளதேச அணி 182 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரன் வித்தியாசத்தில் இந்திய அணியின் 3-வது பெரிய வெற்றி இதுவாகும். அதிகபட்சமாக ஷகிப் அல்-ஹசன் 43 ரன்னும், லிட்டான் தாஸ் 29 ரன்னும், யாசிர் அலி 25 ரன்னும், மக்முதுல்லா 20 ரன்னும், தஸ்கின் அகமது ஆட்டம் இழக்காமல் 17 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்ததால் வங்காளதேச அணி ஒருநாள் தொடரை 2 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 210 ரன்கள் குவித்த இந்திய வீரர் இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதும், வங்காளதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் (141 ரன்கள், 4 விக்கெட்) தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
* வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டியில் அவர் அடித்த 72-வது சதம் (டெஸ்டில் 27 சதம், ஒருநாள் போட்டியில் 44 சதம், 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) இதுவாகும். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை (71 சதங்கள்) பின்னுக்கு தள்ளி விராட்கோலி 2-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
* நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 409 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 6-வது முறையாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்த தென்ஆப்பிரிக்க அணியின் (6 முறை) சாதனையை சமன் செய்தது.