Take a fresh look at your lifestyle.

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

71

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது, நடைமுறையில் இருக்கும் அனைத்து திட்டங்களும் தொடரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. நேரடியாக மின் கட்டணம் செலுத்த செல்பவர்கள், தங்களின் ஆதார் நகலை காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஆன்லைன் வழியாக மின்சார கட்டணம் செலுத்து பவர்கள் ஆன்லைன் மூலம் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மின்சார வாரிய அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள முகாமை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்பட்டு வருகின்ற 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31 ந்தேதி வரை, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் இந்த பணிகள் நடைபெறும். எனவே பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்.

மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பத்திரிகைகள், ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது.

100 யூனிட்டிற்குள்ளாக பயன்படுத்த கூடிய குடிசைகள் மற்றும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான மானியம் உள்பட ஏற்கெனவே இருக்கின்ற அரசு இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் என அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம்.

நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. அதேபோல், புதிய தொழில்நுடபத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்? எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்? ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது? இப்படி எந்தவிதமான தரவுகளும் மின்சார வாரியத்திடம் இல்லை. ஏறத்தாழ ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரத்து 511 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.