இறுதித்தீர்ப்பு வரும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி தரப்பு உறுதி
இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்றனர். ஆனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப் படவில்லை. அப்போது இபிஎஸ் தரப்பில் ஜுலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதும் இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி ஜூலை 11-ல் அண்ணா திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. அதில் எடப்பாடி பழனிசாமி அ அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் இபிஎஸ் தரப்பின் ஜூலை 11 பொதுக்குழுவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். முந்தைய பொதுக்குழு நடைபெற்ற ஜூன் 23-ந் தேதியன்று அண்ணா திமுகவில் எந்த நிலைமை இருந்ததோ அதே நிலைமைதான் நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ஆனால் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய பெஞ்ச் இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ் தரப்பு கூட்டிய ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டது. சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அரியமா சுந்தரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ரஞ்சித்குமார் ஆகியோர் ஆஜராகினர். ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில், “பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம்” என்று ஒப்புதல் அளித்தனர். இதனை நீதிபதிகள் பதிவு செய்துகொண்ட னர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.