Take a fresh look at your lifestyle.

இரவு 12 மணிக்கு போலீஸ் என்னை கைது செய்ய வந்தார்கள்: ராணி மேரி கல்லூரி 104வது பட்டமளிப்பு விழாவில் நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

67

முதல்வர் மு.க. ஸ்டாலின் ராணி மேரி கல்லூரியின் 104 வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: ‘‘நீங்கள் பெற்ற அறிவு, உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடை பெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து நீங்கள் விடைபெறவில்லை. படியுங்கள், மேலும், மேலும் படியுங்கள். பாடங்களைப் படிப்பவர்களாக மட்டுமல்ல பாடங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு, உருவாக்கக்கூடியவர்களாக நீங்கள் உயர வேண்டும். நீங்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆகுங்கள் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ராணி மேரி கல்லூரி என்பது இந்த பெயரைப் போலவே கம்பீரமான, பாரம்பரியமான கௌரவத்தைக் கொண்டிருக்கக்கூடிய கல்லூரி இந்தக் கல்லூரி. 1915 ம் ஆண்டு “கேப்பர் இல்லம்” என்ற அந்தப் பெயரில் புகழ்பெற்ற அந்தக் கட்டடத்தில் இந்த ராணிமேரிக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்களென்றால், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால், உங்கள் ராணி மேரிக் கல்லூரிதான். இது 104 வது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள்! எத்தனை தலைமுறையினருக்குக் கல்வியை – அறிவை – ஆற்றலை -வேலை வாய்ப்பை – தன்னம்பிக்கையை – வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே தான், இந்த ராணி மேரிக் கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது, பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்குலத்திற்கு ஒளிவிளக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

பழம்பெரும் இந்த கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை, நான் எப்பொழுதும் அப்படி பேசுவதும் கிடையாது. ஆனால் அன்றைக்கு இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று பொன்முடி சொன்னது போல, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இந்த வளாகத்திற்குள் உட்கார்ந்து மாணவிகளெல்லாம் ஒரு மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரக்கூடிய குடிநீர் சப்ளையை நிறுத்தியது, கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடையும் போட்டார்கள். கல்லூரியை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளையெல்லாம் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

சட்டமன்றம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வருகிற வழியிலே, ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வாருங்கள். உங்களுடைய போராட்டத்திற்கு “தி.மு.க. நிச்சயமாக ஆதரவு தரும்” என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று எங்களுக்கு கருணாநிதி உத்தரவு போட்டார். கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் நாங்கள் சந்தித்தோம். அதிக நேரம் கூட இல்லை, இரண்டு முதல் நான்கு நிமிடங்கள்தான் இருக்கும். தைரியமாக இருங்கள், நல்ல காரியத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள், உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம்,

ஆனால், அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென்றோம். போகிறபோது கூட கேட் மூடியிருந்தது, அப்போதும் கேட்டை திறந்துவிடுகிறார்கள். வந்தபோதும் கேட்டை திறந்துவிட்டார்கள், போகிறபோதும் காவலர்கள் கேட்டை திறந்து விடுகிறார்கள். இது நடந்தது, பகல் 2 மணி அல்லது 2.30 மணி இருக்கும். இரவு 12 மணிக்கு வேளச்சேரியில் இருக்கிறேன், போலீஸ் வந்துவிட்டது. எதற்கு என்று கேட்டேன்? கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? ராணி மேரி கல்லூரியில் பேராடிக் கொண்டிருக்கின்ற மாணவிகளையெல்லாம் நீங்கள் சுவர் ஏறிக் குதித்து, கேட் ஏறி குதித்து உள்ளே சென்று போய்விட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக கைது. வழக்கு என்னவென்றால், கேட் ஏறி குதித்தாக வழக்கு. என்னையும், பொன்முடி போன்றவர்களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம்.

உங்களுக்காக, மாணவிகளுக்காக நாங்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். ஒருமாத காலம் இருந்தோம். அதில் எனக்கு என்ன பெருமை என்று கேட்டீர்களென்றால், நான் ஏற்கனவே சொன்னேன், இந்த இடத்திற்கு, இந்தக் கல்லூரி வளாகத்திற்கு “கேப்பர்” என்று பெயர். கடலூரில் கொண்டு போய் எங்களை சிறையில் அடைத்து வைத்தார்களே, அந்தச் சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டால், கேப்பர் சிறை, எவ்வளவு பொருத்தம் பாருங்கள். எனவே தான் சொன்னேன், என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்குத் துணைநின்றதற்காக, அதை நினைத்துப் பார்க்கின்றபோது, இது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக என்னைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கிறது. சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், நான் வாடவில்லை, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த ராணிமேரிக் கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்தப் பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து யாராலும் நீக்கிவிட முடியாது. பெருமைமிகு இக்கல்லூரியினுடைய 104- வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்குக் கிடைத்த பெருமை! 21 துறைகளைச் சேர்ந்த 3,259 மாணவியர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதுதான் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய நீங்கள் உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல அது உங்கள் அடிப்படை உரிமை. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளை பெண்கள் ஆறு பேரும் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிக மிகச் சிறப்பு. கழகம் ஆட்சியில் அமைந்த காலத்தில் எல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இப்போது தீட்டியும் வருகிறது. எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் – உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் இந்த ஆண்டு, ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவியர்கள் இதனால் பயன் பெற்றிருக்கிறார்கள்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் காரணமாக, இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி தங்களது கல்லூரிக் கனவை நனவாக்கிக் கொள்ள வரக்கூடிய மாணவிகள், இந்தக் கல்லூரியிலேயே தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக இருப்பதாக நான் அறிந்தேன். எனவே, மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித்தரப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த மே 25 ம் நாளன்று இதே ராணி மேரி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிற விழாவில் நான் கலந்து கொண்டேன்.

நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்கள், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய இளைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

* நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ராணி மேரி கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், பி.எப்.எஸ்.ஐ. பயிற்சியில் 449 மாணவியர்களும், லாஜிஸ்டிக்சில் 221 பேரும், பயிற்சி எடுத்துப் பயன் பெற்றிருக்கிறார்கள். சாதனை கல்லூரி
இப்படி உங்கள் கல்லூரியானது சாதனைக் கல்லூரியாக இருக்கிறது. பட்டம் வழங்கும் கல்லூரியாக மட்டுமல்ல திறமையின் கிடங்காகவும் உங்கள் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக, கல்விப் பணியாற்றி வரும் இந்த ராணி மேரி கல்லூரி, வருங்காலங்களிலும் பெண் கல்வியின் மகத்துவத்தை உலக அரங்கிலும் முன்னிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.

33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டு, இன்று 5 ஆயிரம் மாணவியருடன் மாபெரும் அளவில் உயர்ந்து நிற்கிறது. மிக உயர்ந்த நோக்கம் இருந்தால்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியம். இதேபோன்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக மாணவியர் அனைவரும் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். யார் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெற்ற பட்டம் முழுமை பெறும். நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம், – ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்தத் தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள்.
கடற்கரைச் சாலையில் இருந்து அறிவுச்சாலைக்குள் பயணிக்கப் போகக்கூடிய உங்களுக்கும், உங்களை இந்தக் கோலத்தில் கண்டு பெருமிதத்தில் திளைத்திருக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சிற்றரசு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குநர் ம. ஈஸ்வரமூர்த்தி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் இரா. இராவணன், முனைவர் பா. உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் அ. அனந்த லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.