இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. போட்டியிட போவதாக எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நாங்களும் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தனியாக செயல்படுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இரட்டை சின்னம் தங்களுக்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணை யமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சும் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டது செல்லும் என்றும் அறிவித்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவை யில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே வேட்பாளருக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும். இதில் எந்த சிக்கலுக்கும் இடம் இல்லை.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.