சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். 2026ம் ஆண்டு வரை அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தகுதியை பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது. தேர்தல் படிவத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்திடுவேன். அதனால் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம். அண்ணா தி.மு.க. வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் எப்போதும் காரணமாக இருக்க மாட்டேன். உள்ளாட்சி தேர்தலின் போது அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேர்தல் படிவத்தில் நான் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினேன். ஆனால் அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு நான் காரணம் அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது சமீபத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்கூட நாங்களே கலந்து கொண்டோம். இரட்டை இலை சின்னம் கேட்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. அண்ணா தி.மு.க. இணைந்து செயல்பட வேண் டும் என்பதுதான் எங்கள் தலையாய கோரிக்கை. தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதீய ஜனதா ஆதரவு கேட்டால் கொடுப்போம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களிடம் ஆதரவு கோருவோம். எங்களிடம் கூட்டணி கட்சியினர் பேச்சு வார்த்தையில் தான் இருக்கின்றனர். அண்ணா தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல. இந்த குழப்பத்தைத் தவிர்க்க அண்ணா தி.மு.க.வில் அனைத்து சக்திகளும் ஒண்றிணைய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அண்ணா தி.மு.க. நலனுக்காக, கட்சியின் ஒருங்கிணைப்புக்காக அவருடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை மாவட்டச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காப்பாற்றி வந்த கழக விதிகளைப் பின்பற்றவும் அவர்கள் கொண்டு வந்த விதிகள் செல்லும் என்று நீதிமன்றம் கூறும் வரை சட்டப் போராட்டம் தொடரும். அண்ணா தி.மு.க. விதிகளின்படி கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தர்மயுத்தம். வரும் 23 ம்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் அதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி மற்றும் த.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி அண்ணா தி.மு.க. சார்பில் தங்கள் அணி போட்டியிடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆதரவு கோரினார்கள். இதேபோல தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண் டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரை ஓ. பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்கள். இதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரை அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இன்று மாலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இவர்கள் சந்தித்து பேசவிருக்கிறார்கள்.