Take a fresh look at your lifestyle.

இமாச்சல பிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

109

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது.

ஆனால், முதல்வராக நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், செராஜ் தொகுதியில் 52,076 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராமுக்கு 15,069 வாக்குகள் கிடைத்தன. தேர்தல் தோல்வியை ஏற்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று மாநில கவர்னர் அர்லேகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில் இன்று இமாச்சல் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மதியம் மூன்று மணியளவில் எம்எல்ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இமாச்சல் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா, சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் புபிந்தர் ஹூடா ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரதீபா சிங் தலைமை வகிப்பார்.

முதல்வர் போட்டியில் சுக்வீந்தர் சிங் சுகு, பிரதீபா சிங், முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. இவர்களில் மக்களவை எம்.பி. பிரதீபா சிங் முக்கியமானவராக உள்ளார். இவர் இமாச்சல் காங்கிரசின் முக்கியமானவராக மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்த வீர்பத்ர சிங்கின் மனைவியாவார். வீர்பத்ர சிங் கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவரது மனைவியான பிரதீபா சிங்கிற்கு கட்சிக்குள் நல்ல ஆதரவு இருக்கிறது. தற்போது மக்களவை எம்.பி.யாக இருந்தாலும் கூட பிரதீபா இமாச்சல் காங்கிரஸ் பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் முதல்வராகவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.