இபி பில் செலுத்தவில்லை என்று கூறி பணத்தை ஆட்டையைப் போடும் சைபர்கிரைம் குற்றவாளிகள் சமீபகாலமாக எக்கச்சக்க பணத்தை மோசடி செய்து வருகின்றனர். அது தொடர்பான புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து குவிகின்றன.
அதனையடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் இந்த சைபர்கிரைம் சீட்டிங் ஆசாமிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு மற்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமிஷனர் சங்கர்ஜிவாலின் நேரடி மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் பெரிய படையாக விளங்கி வரும் சென்னை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் எனும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இந்த இபி பில் மோசடி தொடர்பாக ஒரு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ள விவரம்: சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு (Electricity) இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து SMS ஆக அனுப்புவர். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பர். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் மின்வாரியத்திலிருந்து இது போன்ற மெசேஜ்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்று கமிஷனர் சங்கர்ஜிவால் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.