இன்ஸ்டா மூலம் கொள்ளையடித்த 16 வயது சிறுமி உள்பட 4 பேர் கும்பல் கைது: ராயப்பேட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை
robbery gang arrested in royapet
சென்னை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 16 வயது சிறுமி உட்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், பணம் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 15.06.2022 அன்று மாலை, கோபாலபுரம் D.A.V.பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், 19.06.2022 அன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் செல்போனையும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த 2 வழக்குகள் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 18.06.2022 அன்று அபிராமபுரம் காவல் நிலைய எல்லையில், காவேரி மருத்துவமனை அருகே நடந்து சென்ற ஒரு நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மேற்கண்ட செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் மேற்பார்வையில் ராயப்பேட்டை உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் மேற்படி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களின் அருகிலுள்ள சுமார் 42 சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, குற்றவாளிகள் அடையாளம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தனர்.
இறுதியாக, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சிந்தாதிரிபேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், அதன் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது தனிப்படையினருக்கு தெரியவந்ததின்பேரில், தனிப்படை அங்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அங்கு துல்லியமாக கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில், இருசக்கர வாகனத்தில் வந்த 1 இளம்பெண் மற்றும் 1 ஆண் நபர் இருந்ததும், இதே நபர்கள், இராயப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் நடைபெற்ற செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர், மேற்படி இருசக்கர வாகனத்தை அடையாளம் கண்டபோது, அதன் உரிமையாளர் திருத்தணியில் உள்ளது என தெரியவந்தது.
மேலும், தனிப்படையினருக்கு கிடைத்த சிசிடிவி பதிவுகளை குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய Chennai City Crime வாட்சப் குழுவுக்கு அனுப்பி விசாரணை செய்ததில், மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களுக்கு சங்கேத வார்த்தைகளில் குறுஞ்செய்திகள் அனுப்பி அவர்களுடன் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், இளம்பெண் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை செய்ததில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், தனிப்படையினர் திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்று அங்குள்ள லாட்ஜிகளில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, திருவல்லிக்கேணி, ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் மேற்படி செல்போன் பறிப்புகளில் தொடர்புடைய இருசக்கர வாகனத்தை மறைத்து நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் மேற்படி லாட்ஜில் உள்ள ஒரு அறையில் பதுங்கியிருந்த செல்போன் பறிப்பு கும்பலைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் 1 இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த விவேக் (எ) குள்ளா, 26, ஜெகன், 25, கடலூரைச் சேர்ந்த ஜெகதீசன், 24, தூத்துக்குடியைச் சேர்ந்த சரவண பெருமாள், 19 மற்றும் ஒரு 16 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி வெளியிடும் சங்கேத வார்த்தைகளுக்கேற்ப குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து 2 இருசக்கர வாகனங்களில் சென்று, சென்னை, இராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம் விளக்கு, கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை ஆகிய காவல் நிலைய எல்லையில் சுமார் 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி 4 எதிரிகளும் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுமி பிடிபட்டார். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.15,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி செல்போன் பறிப்பு கும்பலை பிடித்த ராயப்பேட்டை உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் இவ்வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய மற்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்.