கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம். இதில் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
அதே போல் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை 1-ந்தேதியான இன்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்ற சரணகோஷம் போட்டு குருசாமி கையால் துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து கொண்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகமானோர் மாலை அணிந்து கொண்டனர். இது போல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலை முதல் ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்தாண்டு தளர்வுகள் முழுவதும் நீக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் 18ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நடைபெற்றது. இன்றைய தினம் முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கின. அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 13ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.