இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி: பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் துவங்கி வைத்தனர்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் காவஸ்கர் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உள்ளது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் சேர்ந்து நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸும் பார்வையிட்டனர். முன்னதாக நேற்று விமானத்தின் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியைக் காண காலை 8.45 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மைதானத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ஐ, பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர்கள் வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். பிரதமர் மோடி வீரர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பிரதமர் ஆண்டனி கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன்களுக்கும் பிரதமர்கள் கேப் வழங்கி போட்டியை தொடக்கி வைத்தனர். இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் சிறப்பு வாகனத்தில் மைதானத்தை வலம் வந்து ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள், இரு அணியின் கேப்டன்கள் உடன் கை கோர்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 75வது ஆண்டு நல்லுறவை குறிக்கும் விதமாக இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை ஜாலியாக கண்டு ரசித்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிரவிஸ் ஹெட் மற்றும் உஸ்மென் கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். 15 ஓவர் வரை இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் டிரவிஸ் ஹெட் (32 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து லாபுசேன் க்ளீன் களம் இறங்கினார். அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 23வது ஓரில் 3 ரன் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், உஸ்மென் கவாஜாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். உஸ்மென் கவாஜா 50 ரன்களை கடந்தார். 57 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 143 எடுத்தனர்.