மத்திய அரசின் ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று நடைபெற்றது. அதில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார். அத்துடன், அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. உங்களுக்கான இந்த வாய்ப்பு ஒரு சிறப்பான தருணத்தில் கிடைத்திருக்கிறது. ஆம், நாட்டின் அமிர்த காலத்தில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நாட்டு மக்களாகிய நாம் உறுதி எடுத்திருக்கிறோம். அந்த உறுதிமொழியை மெய்பிக்க நீங்கள் அனைவரும் தான் “சாரதியாக” செயல்பட வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. வளர்ந்த நாடுகளிலும் கூட இந்த நெருக்கடி இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதே காலம் இந்தியாவுக்கு மகத்தானதாக மாறி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சி பெறப்போகிறது. புதிய வாய்ப்புகள் அதிகரிக்கப்போகிறது என்று பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் கூறுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.