இந்தியாவில் டிசம்பர் 29 ந்தேதி முதல் உணவு விநியோக சேவைகளை நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காபி தொடங்கி டின்னர் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலமே ஆர்டர் செய்யும் வசதிகள் உருவாகிவிட்டன. நாம் விரும்பிய உணவகத்திலிருந்து உணவுகளை பெற்று வீட்டிற்கே டெலிவரி செய்ய அநேக நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக, இந்தியாவை பொறுத்தவரை ஸ்விக்கி, ஜொமேட்டோ முதல் அமேசான் வரை பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அமேசான் நிறுவனம் மே 2020 முதல் இந்தியாவில் தனது உணவு விநியோக சேவையை தொடங்கியது.
இந்நிலையில், பெங்களூருவில் சோதனை அடிப்படையில் உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 29 தேதிக்குப் பிறகு அமேசான் ஃபுட் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற வேண்டாம் என ஒப்பந்தகாரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அமேசான் நிறுவனம் உணவு வினியோக சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பெருநிறுவனங்கள் தமது தொழிலை மேம்படுத்தும் வகையிலும், இழப்பீடை ஈடு செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டுக்குமான செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் வகையில், மெட்டா, ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ‘அமேசான் அகாடமி’ யை மூட முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை நிறுத்தவும் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.