Take a fresh look at your lifestyle.

இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்: முக ஸ்டாலின் பெருமிதம்

74

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 18.12.2022 பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசரின் இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து பேசினார்.

முதல்வர் முக ஸ்டாலின் பேசுகையில், ‘‘அமைச்சர் நாசர் மகளும், மணமகளுடைய அம்மாவுமான ரசூல் திருமணத்தை 1999 ம் ஆண்டு நான்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். அதேபோல, நாசருடைய மகன், ஆசிம் ராஜா திருமணத்தையும் 2014 ம் ஆண்டு நான்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறேன். இன்று நாசர் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துகிறேன். எதைச் செய்தாலும், அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். திருமணத்திற்குத் தேதி கொடுத்தேன், தேதியை கொடுத்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. ஏனென்றால், இவர் ஆடம்பரமாக செய்துவிடுவாரே, பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே, அதனால் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமே, நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சினையில்லை, ஆனால் அமைச்சர் பொறுப்பிலே இருக்கக்கூடிய நாசருக்கு ஏதாவது இழுக்கு வந்துவிட்டால், அதை விமர்சனம் செய்ய பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தும்மினால் போதும், அதைக் கண்டுபிடித்து, அதை சொல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வெளியிடக்கூடிய ஊடகங்களெல்லாம் இன்றைக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்கு சோசியல் மீடியா வளர்ந்து இருக்கிறது. அதனால், நான் அவரை அழைத்து சொன்னேன், “மிகவும் எளிமையாக இருக்க வேண்டும், மிகவும் அமைதியாக இருக்க வேண்டும், கட்சிக் கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டுங்கள். அதற்கு நான் கட்டுப்பாடு சொல்ல மாட்டேன். ஆனால் பேனர் வேண்டாம், கட்-அவுட் வேண்டாம், அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், ஆனால் அதே நேரத்தில் இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்கின்ற வகையில் நீ உன்னுடைய பணியை அமைத்துக் கொள்ள வேண்டும்” என்று நான் கேட்டுக் கொண்டேன். அதை அப்படியே ஏற்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

பால் விலை குறைந்துவிட்டது. அதுவே மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆவினின் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இவர் அமைச்சராக இருக்கக்கூடிய நேரத்தில்தான். தீபாவளியின் போது நெய் விற்பனை அதிகமானது, புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 12 விதமான கேக் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் தீபாவளியின் போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு நம்முடைய ஆட்சியில் 85 கோடி ரூபாயாகவும், இந்த தீபாவளியின்போது 116 கோடி ரூபாயாகவும் உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது பெரிய சாதனை. இதன் மூலமாக கடந்த ஆட்சியை விட பால் பொருட்கள் விற்பனை என்பது பல மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது.

முகச் சிதைவு நோய் ஏற்பட்டு ஒரு பெண் பாதிக்கப்பட்டதெல்லாம் நீங்கள் பத்திரிகை களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். தான்யா என்ற பள்ளிச் சிறுமிக்கு சவீதா மருத்துவ மனையில் சிகிச்சை கொடுத்தோம். அந்தச் சிறுமி தொலைக்காட்சியில், “என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா, நான் பள்ளிக்குச் சென்றால், என்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், அதனால் பள்ளிக்குச் செல்லாமல் என் படிப்பு பாழாகிக் கொண்டிருக்கிறது, இதற்கு ஏதாவது எனக்கு வழி கிடையாதா?” என்று பேட்டி கொடுத்தார். அதை நான் பார்த்தேன். பார்த்தவுடனே ஆவடி பகுதியில் இருப்பதால் உடனே நாசருக்கு போன் போட்டு ஒரு வார்த்தைதான் சொன்னேன். சொன்ன உடனே அந்த இடத்திற்குச் சென்று, அந்தச் சிறுமியை உரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பிறகு சவீதா மருத்துமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடந்தது.

ஏதோ சிகிச்சை நடந்தது, முடிந்தது என்று விட்டுவிடாமல், அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அத்தனையையும் செய்துகொடுத்தார். இன்றைக்கு அந்தப் பெண் சிரித்த முகத்தோடு, அந்தச் முகச் சிதைவு சரிசெய்யப்பட்டு பள்ளிக்குச் சென்று கொண்டி ருக்கிறார் என்று சொன்னால் அதற்கும் காரணம் நாசர் என்பதை எண்ணி நான் உள்ள படியே மகிழ்ச்சியடைகிறேன். எந்தப் பணியைக் கொடுத்தாலும், அதை சிறப்போடு நிறைவேற்றித் தரக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்று பிரபலமான ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே-வில் வெளிவந்த செய்திகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நான் ஏற்கனவே சொன்னேன், கடந்த ஆண்டே குறிப்பிட்டுச் சொன்னேன். ‘நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின்’ என்று சொல்வதைவிட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்ல வேண்டும், அதுதான் எனக்குப் பெருமை என்று சொன்னேன்.

இந்த ஆண்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால், தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சிதான் இன்றைக்கு இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றியிலே பங்கேற்கக் கூடியவர்களில் ஒருவராகத்தான் நாசர் விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இல்லத்தில் நடைபெறுகிற மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.