Take a fresh look at your lifestyle.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ‘இஸ்ரோ’

85

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத் தியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடி களில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்பட்டது. இது பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம்) அமைப்பு ஐதராபாதைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்திருந்தது.

இதையடுத்து, ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டத்தின் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ‘ஸ்கைரூட்’ ஈடுபட்டு வந்தது. 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கை கோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. இதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம் எஸ்’ என்று பெயரிடப்பட்டது.

‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. அதன்படி, நவம்பர் 15-ம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பருவச் சூழல்கள் சாதகமாக இருப்பதால் ‘விக்ரம் எஸ்’ ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் கைக்குலுக்கி கொண்டனர். அங்கிருந்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விஞ்ஞானிகளை பாராட்டினார்.