உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 3வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஐகர் கொனஷெஙோவ் தெரிவித்துள்ளார்.
கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தலைநகர், விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. அதேபோல் அசோவ் கடற்பகுதிக்கு அருகில் உள்ள மெலிட்டோபோல் துறைமுக நகரையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. ‘‘உக்ரைனுக்குள் ஊடுருவிய 14 ரஷ்ய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம்’’ என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. எங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.
உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வெளியே ரஷிய ராணுவ படையை சேர்ந்த, பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் வாய்ந்த வாகனம் ஒன்று அழிக்கப்பட்டு, அதன் பக்கத்தில் ஆடை முழுவதும் பனி படர்ந்த நிலையில் வீரர் ஒருவரின் உடல் கீழே விழுந்து கிடப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. 3வது நாளான இன்று கீவ் நகரின் தெருக்களில் ரஷ்யா உக்ரைன் இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
முன்னதாக நேற்று மாலை தொடங்கிய ரஷ்ய தாக்குதல் விடிய விடிய தொடர்ந்தது. உக்ரைனின் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்தது. கிழக்குப் பகுதியில் தாக்குதல் அதிகமாக இருந்தது. மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே பிற நாடுகளின் எல்லைகளை அடைந்தனர். முதல் நாள் சண்டை முடிவில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால், நேற்று தரை வழி மற்றும் வான்வழித் தாக்குதல் உக்கிரமடைந்த நிலையில் குடியிருப்புப் பகுதிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் செய்தித் தொடர்பாளர் ரவீனா சம்தசானி நேற்று மட்டும் பொதுமக்களில் 25 பேர் பலியாகியுள்ளனர். 102 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.