Take a fresh look at your lifestyle.

இடைத்தேர்தல்: ஈரோட்டில் 35 இடங்களில் போலீசார் தீவிர சோதனை

84

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாகனங்கள் அதிக அளவில் உலா வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் பணியாற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் ஈரோட்டில் திரண்டு உள்ளனர். தேர்தல்  தொடர்பான ஆலோசனை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, பிரச்சாரம் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியாற்ற ஈரோடுக்கு வந்து இருப்பதால் இங்கு உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் அரசியல் கட்சியினரின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இதே போல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீட்டின் வசதியை பொறுத்து மாத வாடகையாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், பங்களா போல் இருந்தால் ரூ. 1 லட்சம் வரை வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

தங்கும் விடுதி, ஓட்டல்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தங்கியுள்ளனர். தொண்டர்கள் தங்க வாடகைக்கு வீடு தேடும் பணியில் உள்ளுர் கட்சிகாரர்கள் உதவியுடன் வெளியூர் அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் நடமாட்டமாகவே உள்ளது. ஈரோடு நகர பகுதியில் வீடு வாடகை அதிகமாக இருப்பதால் சிறிய சிறிய கட்சியினர் ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள சோலார், திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர்.

இடைத்தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும் ஏற்கனவே 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வெளிமாநில வியாபாரி ஒருவரிடம் ரூ.1.17 லட்சம் பணம், நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் நிலை கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவு, பகல் பாராமல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வரு கின்றனர். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய சோதனை சாவடியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தான் சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதியில் இருந்து வாகனங்கள் வருகின்றன. எனவே இந்த சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் போலீசார் உடன் இணைந்து முகாமிட்டு தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். அதனை வீடியோ மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகு தியில் தி.மு.க. சார்பில் 11 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் முகாமிட்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதேப்போல் வெளிமாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.

இதேப்போல் அண்ணா தி.மு.க. சார்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை எடப்பாடி நியமித்திருக்கிறார். இவர்களில் 30க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகா மிட்டு ள்ளனர். மேலும் வெளி மாவட்ட நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் 118 பேர் குழுவை நியமித்திருக்கிறார். இதன் காரணமாக இன்று முதல் ஈரோடு மாவட்ட போ லீஸ் சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, ஜி.எச். ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், மூலப்பட்டறை, பவானி ரோடு என ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான 35 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.